Sunday, December 22, 2024
Google search engine
Homeஇந்தியாபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 8-வது நாளாக தொடரும் டாக்டர்களின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 8-வது நாளாக தொடரும் டாக்டர்களின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சமீபத்தில் வழக்கில் குற்றப்பத்திரிகை ஒன்றை சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

இந்த விவகாரத்தில் கடந்த 4-ந்தேதி பணிநிறுத்தத்திற்கு இளநிலை டாக்டர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் சுகாதார சேவை பாதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) மாலை 3 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 6 டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இதன்பின் ஞாயிற்று கிழமை மாலை மற்றொரு டாக்டரும் அதில் இணைந்து கொண்டார்.

கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 7-வது நாளை அடைந்தபோது, அனிகேத் மஹதோ என்ற டாக்டர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது உடல்நலம் தேறி வருகிறார். மொத்தம் 10 டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களில் 6 பேரின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 2 இளநிலை டாக்டர்களின் உடல்நிலையும் மோசமடைந்து உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை டாக்டர் தேபசிஷ் ஹால்டர் கூறும்போது, கோரிக்கைகளை அரசு முழு அளவில் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய அவர், டாக்டர்களுக்கு ஏதேனும் நடந்தால், அதற்கு அரசே முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இளநிலை டாக்டர்கள் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும்படி மேற்கு வங்காள அரசுக்கு 24 மணிநேரம் இறுதி எச்சரிக்கையும் விடப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம் தொடங்குவோம் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், டாக்டர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக பலரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments