ராஜஸ்தானின் சலாசரில் இருந்து லஷ்மங்கர் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சிகார் மாவட்டத்தில் சாலையில் திருப்பும் போது மேம்பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லஷ்மங்கர் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி புவன் பூஷன் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.