திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 6 பேர் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வங்காளதேசத்தைச் சேர்ந்த சிலர், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரெயில்வே போலீசாரின் கூட்டுக்குழு ஜிரானியா ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உரிய ஆவணங்களின்றி சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 3 ஆண்கள் மற்றும் 3 திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்களில் நான்கு பேர் வங்காளதேசத்தின் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவரும் நோகாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு, அவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகவும், ரெயிலில் மும்பை செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.