குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் பதர்ஷிங்கா கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சய் போல்ரா. இவர், மாருதி வேகன் ஆர் ரக கார் ஒன்றை 18 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த கார் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழைய காராகி விட்டது. ஆனால், அதற்கு உரிய மதிப்பை கொடுக்க விரும்பியிருக்கிறார்.
இதனால், யாரும் செய்யாத விசயம் ஒன்றை அவர் மேற்கொண்டுள்ளார். 1,500 கிராமவாசிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து, பூசாரிகள் மற்றும் மத தலைவர்களை அழைத்து வந்து, அவருடைய அன்புக்குரிய காருக்கு சமாதி ஏற்படுத்தி உள்ளார். அதற்கு முன்பு, பூக்களாலும், ரோஜா இதழ்களாலும் காரை அலங்கரித்திருக்கிறார். காரை கிராமவாசிகள் சூழ்ந்து கொண்டு கர்பா நடனம் ஆடியபடியே சமாதி பகுதிக்கு சென்றனர்.
அந்த பகுதியில், பண்ணை நிலத்தில் 15 அடி ஆழ குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. இசை கச்சேரி பின்னணியுடன் பூஜையும் நடத்தப்பட்டது. சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், குழிக்குள் கார் இறக்கி வைக்கப்பட்டது.
இதுபற்றி போல்ரா கூறும்போது, ஆரம்ப காலத்தில் சூரத் நகரில் இடைத்தரகராக பணியாற்றினேன். ஆனால், தற்போது தன்னிடம் ஆடி கார் ஒன்று உள்ளது. கட்டுமான தொழிலதிபராகவும் இருக்கிறேன். 2006-ம் ஆண்டில் வாங்கிய இந்த கார், குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தது. இந்த கார் வளங்களை கொண்டு வந்தது.
சமூகத்தில் குடும்பத்தின் கவுரவமும் உயர்ந்தது. இதனால், அதற்காக நன்றிகடன்பட்டவர்களாக இருக்கிறோம் என்றார். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சுவையான விருந்தும் அளிக்கப்பட்டது.