90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 5வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்சய் ஜெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.
தமிழகம் தரப்பில் ஷாரூக் கான் 11 ரன்னுடனும், ஜெகதீசன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. இதில் ஷாரூக் கான் மற்றும் ஜெகதீசன் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஷாரூக் கான் 86 ரன்னிலும், ஜெகதீசன் 56 ரன்னிலும் அவுட் ஆனார்.
தொடர்ந்து களம் இறங்கிய விஜய் சங்கர் 11 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 38 ரன், ஆண்ட்ரே சித்தார்த் 78 ரன், சோனு யாதவ் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து முகமது அலி மற்றும் அஜித் ராம் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டை இழந்து 324 ரன்கள் குவித்துள்ளது. தமிழகம் தரப்பில் முகமது அலி 37 ரன்னுடனும், அஜித் ராம் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.