மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியம் நாட்டின் தொழில் மற்றும் சேவை துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. வேளாண்மையிலும் சிறந்து விளங்குகிறது. தற்போது மராட்டியம்தான் நாட்டின் வணிக தலைநகரமாக உள்ளது. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் மராட்டியம் நாட்டின் வணிக தலைநகராக இருக்கும் என்பது தெரியவில்லை.
பா.ஜ.க. ஆட்சியில் மராட்டிய மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிகிறது. நாட்டின் முதன்மையான மாநிலமாக மராட்டியத்தை படிப்படியாக முன்னேற்றி கட்டி எழுப்பியது காங்கிரஸ் கட்சிதான்.
2022-23-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24-ல் மராட்டியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4-ல் இருந்து 7.6 ஆக குறைந்து உள்ளது. அதேபோல பற்றாக்குறை ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது. மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்து உள்ளது. சேவை துறையின் வளர்ச்சியும் 13-ல் இருந்து 8.3 ஆக சரிந்து இருக்கிறது. மாநிலத்தின் மூலதன செலவினம் ரூ.85 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த சரிவு நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சரிவை ஏற்படுத்தியவர்களால் அதை நிறுத்த முடியாது.
மராட்டியத்தில் வேலைவாய்ப்பு இல்லை. இதனால் பல சமூக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வேலைவாய்ப்பின்மை மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சினை. தற்போதைய அரசிடம் அதற்கு எந்த பதிலும் இல்லை. மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவீதமாக உள்ளது. மாத சம்பளம் பெறுவோர் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.