காஷ்மீரின் குப்வாரா பகுதியை சேர்ந்தவர் சையத் இஷான் புகாரி (வயது 37). இஷான் புகாரி என்றும் டாக்டர் இஷான் புகாரி என்றும் தன்னுடைய பெயரை மாற்றி கொண்டதுடன், தன்னை ஒரு ராணுவ டாக்டர், அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர், பிரதமர் அலுவலக உயரதிகாரி மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையவன் என கூறி கொண்டு பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆள்மாறாட்ட வழக்கில் ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் நியுல்பூர் கிராமத்தில் வைத்து ஒடிசா சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இதுபற்றி சிறப்பு அதிரடி படையின் ஐ.ஜி. ஜே.என். பங்கஜ் கூறும்போது, அவர் நேரத்துக்கு ஏற்றாற்போல் அவருடைய அடையாளங்களை மாற்றி கொண்டு மேற்கூறிய தொழிலில் ஈடுபடுபவர் என காட்டி கொண்டு வலம் வந்துள்ளார். பல்வேறு போலி அடையாளங்களை கொண்டிருந்த அவர், பாகிஸ்தான் நபர்களுடனும், கேரளாவை சேர்ந்த சந்தேகத்திற்குரிய சில சக்திகளுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
அமெரிக்காவின் உயரிய ஐவி லீக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்ததற்கான சான்றிதழ்களை பெற்று வைத்திருக்கிறார். இதனை கொண்டு, தன்னை ஒரு டாக்டர் என அடையாளப்படுத்தி இருக்கிறார். கனடா சுகாதார சேவை மையத்தின் போலியான ஒரு மருத்துவ சான்றிதழ், தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் போலியான சான்றிதழையும் வைத்திருக்கிறார்.
அவரிடம் சர்வதேச பட்டப்படிப்புக்கான சான்றிதழ்கள், பிரமாண பத்திரங்கள், பத்திரங்கள், ஏ.டி.எம். அட்டைகள், வெற்று காசோலைகள், ஆதார் அட்டைகள் மற்றும் விசிட்டிங் கார்டுகள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். பல திட்டங்களையும் வகுத்துள்ளார்.
இதுபற்றி நடந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பல்வேறு அடையாளங்களை கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பெண்களை திருமணம் புரிந்துள்ளார். பல பெண்களுடன் காதல் தொடர்பிலும் இருந்து வந்துள்ளார்.
வலைத்தளங்கள் மற்றும் செயலிகளிலும் தீவிர செயல்பாட்டில் இருந்துள்ளார். சில தேச விரோத சக்திகளுடனும் அவருக்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் உளவாளி என்பதனையும் நாம் புறந்தள்ளி விட முடியாது. எனினும், இதற்கெல்லாம் போதிய சான்றுகள் நம்மிடம் இல்லை. எனினும், என்.ஐ.ஏ.வுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம் என்று ஐ.ஜி. பங்கஜ் கூறியுள்ளார்.