மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அங்குள்ள குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகள் நாட்டையே உலுக்கியது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
இதுவரை மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 258 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சில மாதங்களாக அங்கு அமைதியான சூழல் நிலவியது. ஆனால் சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியிலும், மணிப்பூர் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மணிப்பூருக்கு செல்லாத பிரதமர் மோடியை அந்த மாநில மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலையிட்டு மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மணிப்பூரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூருக்கு ராணுவத்தின் 90 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மணிப்பூருக்கு அனுப்பப்படும் ராணுவ கம்பெனிகளின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.