18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் (2025) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் (முன்னணி வீரர்கள்) ஜெட்டா நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியது.
அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் ‘மண்ணின் மைந்தன்’ அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. இந்நிலையில், சென்னை அணியில் தோனி, ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, வாழ்க்கை ஒரு வட்டம் என சிலர் சொல்வார்கள். சென்னை அணிக்காக கடந்த 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது கிரிக்கெட் பயணத்திற்கு உதவியாக இருந்தது. 2011ல் என்னை ஏலத்தில் எடுக்க சென்னை போட்டி போட்டதுபோல தற்போதும் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு சி.எஸ்.கே-வுக்கு விளையாடுவது பெருமையாக உள்ளது. தோனி மற்றும் ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.