வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதைபோல புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் புயல்,மழை காரணமாக 2 தாலுக்காளில் உள்ள திருவிடை மருதூர், கும்பகோணம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.