வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கிடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் (74 ரன்கள்), தன்சீத் ஹசன் (60 ரன்கள்) மற்றும் மக்மதுல்லா (50 ரன்கள்) மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோமரியோ ஷெப்பர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரண்டன் கிங் 9 ரன்களிலும், எவின் லூயிஸ் 16 ரன்களிலும், அவர்களை தொடர்ந்து கீசி கார்டி 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த கேப்டன் ஷாய் ஹோப் – ரூதர்போர்டு இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹோப் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஜஸ்டின் கிரெவ்ஸ் 41 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினா.
47.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.