கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் சுகாதாரத் துறை மந்திரியும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,
அதிபர் அநுர குமார டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை, 2நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். அவருடன் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜித ஹேரத், இணை மந்திரி அனில் ஜயந்த பொனாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனர்’ என்றார்.
இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும். எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபராக அ நுர குமாரதிசாநாயக பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.