கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விவசாயம் செய்து வரும் இளைஞர் ஒருவர், திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது சுயவிவரங்களை பதிவு செய்து தனக்கு பொருத்தமான மணப்பெண்ணை தேடி வந்துள்ளார். அப்போது அந்த இளைஞருக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். தொடர்ந்து இருவரும் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரியா தனது அக்காவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி இருக்கிறார். இதனை நம்பிய இளைஞர் பல்வேறு தவணைகளில் மொத்தமாக சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பிரியாவிற்கு கொடுத்திருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட சில நாட்களில் பிரியாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் சந்தேகமடைந்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்தில் பிரியா கூறிய முகவரிக்கு சென்று விசாரித்தபோது, அங்கு அப்படி யாருமே இல்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், திருமண மோசடியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பிரியாவின் முதல் கணவர் உயிரிழந்த பின்னர், அவர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று அடுத்தடுத்து பல்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பிரியா மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து அவர்களிடம் நெருக்கமாகப் பேசி மோசடி செய்து வந்ததாக பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் சுமார் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிரியவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.