தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 30 பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று ஆர்.கே.புரம் மற்றும் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள 8 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வாரத்தில் டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது 3வது முறையாகும்.
வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காலை 6:09 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பள்ளியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தேவையற்ற பீதிக்கு வழிவகுத்துள்ள தொடர்ச்சியான போக்கைக் குறிப்பதால், இது குறித்து முழுமையான விசாரணையை தொடங்கி உள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
முன்னதாக கடந்த 9ம் தேதி குறைந்தபட்சம் 44 பள்ளிகளுக்கு இதே போன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அந்த மிரட்டல்கள் புரளி என போலீசார் தெரிவித்திருந்தனர்.