டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங்; “இந்தியாவின் விண்வெளி, கடல் மற்றும் இமயமலை தொடர்பான ஆய்வுகள் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முன்பு போதுமான அளவில் செய்யப்படவில்லை. இந்த ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவில் பங்களிக்கும்.
இந்தியா தனது விண்வெளித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் பாதையில் உள்ளது. விண்வெளி பொருளாதாரத்தில் கடந்த 2014-க்குப் பிறகு இந்தியா பெரிய முன் நகர்வை எடுத்துள்ளது. தற்போது, உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்திய விண்வெளித் துறையின் பங்களிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உள்ளது. இது அடுத்த 10ஆண்டுகளில் 3 மடங்கு உயரும். இது பிரதமரின் தலைமை இல்லாமல் நிறைவேறி இருக்காது.
மேலும் “நமது பிரதமர் விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டுள்ளார். இதன்மூலம், ஏராளமான புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. நாசா நிறுவனத்திற்குப் பிறகு இஸ்ரோ உருவாகியிருந்தாலும், நாம் உலகின் எந்த விண்வெளி அமைப்பை விடவும் பின்தங்கியிருக்கவில்லை. நாளுக்கு நாள் நமது வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதுவரை, நாம் 432 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறோம். அதில், 397 செயற்கைக் கோள்கள் 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் செலுத்தப்பட்டவை.
ஆரய்ச்சி செய்யப்படாத புதிய பகுதிகளை நாம் ஆராயவேண்டும். நம்மிடம் வளங்கள் மற்றும் ஆற்றல்களுக்குப் பஞ்சமில்லை. வருகிற 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென தனி விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.