ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் (வயது 38) நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அஸ்வின் அதன்பின்பு என்ன செய்ய உள்ளார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி, மழையால் பாதிப்புக்கு உள்ளானது. இந்த ஆட்டம் நேற்று டிராவில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா வெளியிட்ட செய்தியில், 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கையோடு அஸ்வின், இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். மெல்போர்னில் நடைபெறவுள்ள போட்டியில் அஸ்வின் பங்கேற்கமாட்டார் என்று கூறியுள்ளார். இதன்படி, அஸ்வின் இன்று நாடு திரும்புகிறார்.
ஓய்வு முடிவை அறிவித்த பின்னர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வின் பதிலளிக்கவில்லை. எனினும், அவருடைய வருங்கால திட்டங்களை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றபோதும், கிரிக்கெட் வாழ்வை அவர் முற்றிலும் துறக்கவில்லை. கிளப் அளவிலான போட்டிகளில் விளையாடி திறமையை காட்ட அவர் ஆர்வத்துடன் இருக்கிறார் என கூறப்படுகிறது.
உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பேன் என கூறியுள்ள அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டே எனக்கு அனைத்தும் தந்துள்ளது. அதனால், தொடர்ந்து கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருப்பேன் என கூறியுள்ளார். இதனால், தமிழக அளவிலான ரஞ்சி டிராபி போட்டி தொடர் போன்றவற்றில் அவர் விளையாட கூடும் என கூறப்படுகிறது.
2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாட உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. பந்து வீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக பங்காற்றியவர் அஸ்வின். அவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் உள்பட 3,503 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஆட்டங்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் என்ற பெருமைக்குரியவர். அவருடைய திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும், தொடர்ந்து கிரிக்கெட்டில் விளையாடுவார் என்ற தகவல் ஆறுதல் தருகிறது.