உலகம் முழுவதும் கிறிஸ்தவ மத பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜெர்மனி நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை(20.12.2024) இரவு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டிருதனர்.
அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது. இதில் சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தித்தனர். மேலும், கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் “ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் “ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலகவேண்டும் “என்று குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது.