சீனாவில் 2019-ம் ஆண்டு தோன்றி 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலம், கொரோனா சீசனாகவே மாறி விட்டது. அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஒமைக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80 சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,606 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லி அடுத்த நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, மக்கள் அடர்த்தி மிகுந்த நொய்டாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.