Wednesday, April 9, 2025
Google search engine
Homeஇந்தியாபாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு: 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு: 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பழைய பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது.

இதற்கிடையே, பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் ‘தூக்கு பாலத்தில்’ அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

பின்னர், பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி புதிய ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டது.

இதையடுத்து, புதிய ரெயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை.

ரெயில்வே பாலப் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறந்துவைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, பாம்பன் புதிய ரெயில்வே பாலம் மத்திய அரசின் கனவு திட்டம் என்பதால் அதை பிரதமர் மோடி மட்டுமே திறந்து வைப்பார் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். கடந்த 23-ந்தேதி தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், ரெயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments