ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் திலக் வர்மா ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.
இதன் காரணமாக அவர் 23 பந்தில் 25 ரன் எடுத்திருந்த போது ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகி வெளியேறினார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டது குறித்தும், திலக் வர்மா ‘ரிட்டயர்டு அவுட்’ ஆக காரணம் என்ன? என்பது குறித்தும் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்கள் தோற்றது உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள்கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம். நான் எப்போதுமே எனது பந்து வீச்சை ரசித்து வீசுகிறேன். இந்த போட்டியில் பெரிய விக்கெட்டுகள் எடுத்தும் அதில் மகிழ்ச்சி இல்லை. நான் ஆடுகளத்தை புரிந்து அதற்கு ஏற்றவாறு பந்துகளை வீச வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.
விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் செயல்படுவது இல்லை. ஒரு பேட்டிங் யூனிட் ஆக நாங்கள் போட்டியை தவற விட்டோம். ஒரு அணியாக நாங்கள் தோற்றோம், நான் யாரையும் தோல்விக்கு காரணம் என்று சுட்டிக் காட்ட விரும்பவில்லை. முழு பேட்டிங் யூனிட்டும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தோல்விக்கு நான் முழு உரிமையும் எடுத்துக் கொள்கிறேன்.
திலக் வர்மா ஆட்டத்தின் இறுதியில் வெளியேறியது குறித்து கேட்கிறீர்கள். எங்களுக்கு இறுதியில் பெரிய ஷாட்கள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுபோன்று சில நாட்கள் வரும் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நடக்காது. நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன்.
சிறந்த முடிவுகளை எடுங்கள், பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள் பேட்டிங்கில் வாய்ப்புகளை எடுங்கள். இது ஒரு நீண்ட தொடர் இன்னும் இரண்டு வெற்றிகள் கிடைத்தால் நாங்கள் முன்னேற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.