இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
இதுபற்றி படையினர் வெளியிட்ட செய்தியில், பயங்கரவாதிகள் கும்பலாக வெடிபொருள் கிடங்கு ஒன்றிற்குள் நேற்றிரவு நுழைந்தனர். அவர்களை அடையாளம் கண்டதும், வான்வழி தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில், அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், அந்த கட்டிடம் மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என தெரிவித்து உள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஹகாரி இதுபற்றி கூறும்போது, உலகம் இதனை நினைவு கூரவேண்டும். வயது முதிர்ந்தோர், ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமிகள் மற்றும் கைக்குழந்தைகள் ஆகியோரை ஹமாஸ் அமைப்பு பணய கைதிகளாக பிடித்து சென்றுள்ளது.
ஒவ்வொருவரையும் வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தேவை உள்ளது. அதனை செய்து முடிக்கும்வரை நாங்கள் ஓய்வெடுக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.