கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் கர்நாடகாவில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
இரண்டு மாணவிகள் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பள்ளி முதல்வர் சங்கரப்பாவை, ஷிவமொக்கா பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர் பரமேஸ்வரப்பா சஸ்பெண்ட் செய்தார்.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய தேர்வு செய்ததாக ஒரு தலித் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு பணம் செலவழிக்க முடியாததால் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக பள்ளி முதல்வர், பெற்றோரிடம் கூறியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.