உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது பெலன்கஞ்ச். இங்குள்ள ஒரு வீட்டில் ராகவேந்திர சிங் (வயது 27) என்ற போலீஸ் ஏட்டு வாடகைக்கு வசித்து வந்தார். அவரது வீட்டின் கூரையில் ஒரு பெண் பிணமாக தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் அந்த பெண் தூக்கில் தொங்கவிடப்பட்டதால் மரணம் நிகழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண், 25 வயதுடைய தலித் பெண் என்றும், குருகிராமில் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் சம்பவத்தன்று ஏட்டு ராகவேந்திரசிங்கை பார்க்க வந்துள்ளார். அன்றைய தினம் ராகவேந்திரா சிங் போலீஸ் நிலையத்தில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பி சென்று அந்த பெண்ணை சந்தித்து உள்ளார். பின்னர் நடந்த விஷயத்தை நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திரா சிங்கை கைது செய்தனர். அவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ்காரர் ஜான்சியை சேர்ந்தவர் என்றும், அங்கு இளம்பெண்ணும், அவரது சகோதரரும் நர்சிங் பயிற்சி பெற்றபோது இருவருக்கும் ஏட்டுவுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பெண்ணின் சகோதரர் கூறும்போது, “தானும்கூட ராகவேந்திரா சிங்கின் வீட்டிற்கு சென்று வந்துள்ளேன். இருவரும் விரும்பியபோதும், சகோதரியை திருமணம் செய்து கொள்ள ராகவேந்திரா சிங் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், இருந்தபோதிலும் எனது சகோதரியுடன் அவர் பழகி வந்தார்” என்றார்.
இளம்பெண் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து ராகவேந்திரா சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.