செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லானூர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தீப்பிடித்து எரிந்த குடிசை வீட்டில் ஆண் ஒருவர் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். காலி வீட்டு மனையில் புதிதாக எரிந்து போன குடிசை போடப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்?, அந்த குடிசை வீடு யாருடையது? என்று தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில் அந்த வீடு சென்னை அயனாவரத்தை சேர்ந்த ‘ஜிம்’ பயிற்சியாளர் சுரேஷ் (வயது 38) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அயனாவரத்துக்கு சென்று சுரேஷ் வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெற்றோர் தனது மகனை காணவில்லை என்று தெரிவித்தனர்.
எனவே எரிந்த நிலையில் கிடந்தது சுரேஷாக இருக்கலாம் என்று கருதிய போலீசார், பெற்றோரை அழைத்து வந்து உடலை காட்டினார்கள். அவர்களும் எரிந்து கிடந்த உடல் தனது மகன் சுரேஷ்தான் என்று தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.
சுரேஷ் மரணம் அடைந்தது தொடர்பாக அவர் வசித்து வந்த அயனாவரம் பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி என இரங்கல் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இதனையடுத்து ஒரத்தி போலீசார் சந்தேக மரணம் (இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 174(4) ) என வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுரேஷ் எப்படி இறந்தார், அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரை யாரும் கொலை செய்து வீட்டுக்குள் போட்டு குடிசைக்கும் தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே சுரேஷ் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்களான வேலூர் மாவட்டம், கலாஸ்பாளையத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (32,) தாம்பரம் அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திராஜன் (23) ஆகியோரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கினர்.
இதற்கிடையே சுரேசுடன் வெளியில் சென்ற சென்னை எண்ணூர் அடுத்த எர்ணாவூர் கனாமி குடியிருப்பைச் சேர்ந்த டில்லிபாபு (39) என்ற பெயிண்டர் திடீரென மாயமாகி விட்டார். இதுதொடர்பாக எண்ணூர் போலீசில் அவரது தாயார் லீலாவதி புகார் செய்தார். ஆனால் இந்த புகார் தொடர்பாக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நீலாவதி புகார் செய்தார். அதன் பிறகும் டில்லி பாபு குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இதனையடுத்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் அவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, டில்லி பாபு கதி என்ன ஆனது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு எண்ணூர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதன்பேரில் மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் களத்தில் இறங்கி அதிரடி விசாரணை நடத்தினார். அவரது விசாரணையில், டில்லிபாபு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போதுதான் தீயில் கருகி இறந்தது சுரேஷ் இல்லை, டில்லிபாபுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரித்தனர். அப்போதுதான் சுரேஷ் இறக்கவில்லை என்பதும், அவர் அரக்கோணத்தில் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
இதனை அறிந்த துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் கடும் அதிர்ச்சி அடைந்தார். இறந்து போனதாக நாடகமாடிய சுரேஷ் அரக்கோணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருடைய நண்பர்கள் கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர்.
கைதான சுரேஷிடம் இறந்ததாக ஏன் நாடகமாடினீர்கள்?, டில்லிபாபு ஏன் தீயில் கருகி இறந்தார்?, அவரை சாகடித்தது யார்? என்றும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது சுரேஷ் தனது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
எனது பெயரில் ரூ.1 கோடிக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்தேன். அந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி எப்படி அபகரிப்பது? என்று திட்டமிட்டோம். எனது நண்பர்கள் ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோர் ஒரு புதுமையான சதித்திட்டத்தை சொன்னார்கள். நான் இறந்தால்தான் அந்த பணம் கிடைக்கும் என்றும் அவர்கள் சொன்னார்கள். நான் இறக்கக்கூடாது, அதே சமயத்தில் நான் இறந்ததாக தகவல் வெளியாக வேண்டும்.
அந்த திட்டத்தை செயல்படுத்தினால் பணம் கிடைக்கும். அதற்கு ஒருவர் இறக்க வேண்டும். யாரை பலி கொடுக்கலாம்? என்று யோசித்தோம். அப்போது எங்கள் நண்பரான டில்லிபாபுவை தீர்த்துக்கட்டி விட்டு நான் இறந்து போனதாக நாடகம் ஆட முடிவு செய்தோம்.
அவரை எப்படி தீர்த்துக்கட்டுவது என்று யோசித்தபோது, அரிவாளால் வெட்டி கொன்றால் கொலை என்று ஆகிவிடும். எனவே அவரை எனது குடிசை வீட்டுக்கு அழைத்து சென்று தீ வைத்து எரித்துக்கொன்று விட்டால் தீ விபத்தில் அவர் இறந்ததாக காட்டி விடலாம். போலீசாரையும் நம்ப வைத்து விடலாம் என்று முடிவு செய்தோம்.
எங்கள் சதித்திட்டத்தின்படி டில்லிபாபுவை எனது குடிசை வீட்டுக்கு அழைத்து சென்றோம். வயிறு முட்ட 4 பேரும் மது அருந்தினோம். டில்லிபாபுவுக்கு அளவுக்கு மீறி மதுவை ஊற்றி கொடுத்தோம். அவர் குடிபோதையால் மயக்கம் அடைந்தார்.
உடனே அவரை கழுத்தை நெரித்து கொன்றோம். குடிசைக்கு தீ வைத்தோம். குடிசை எரிந்த விபத்தில் நான் இறந்து போனதாக வெளியில் தகவல் பரப்பினோம். போலீசாரும் அதை நம்பினார்கள். எனது தாயாரும் கருகிய உடலை பார்த்து எனது மகன்தான் இறந்துவிட்டதாக அடையாளம் காட்டினார். இந்த திட்டம் வெற்றிகரமாக அரங்கேறியது. ஆனால் போலீசார் விபத்தில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துவிட்டனர்.
பத்திரிகைகளிலும் அதுபோல செய்தி வந்தது. இன்சூரன்ஸ் அதிகாரிகள் விபத்தில் இறந்தால் மட்டுமே பணம் தர முடியும், ஆனால் போலீஸ் வழக்கு வேறுவிதமாக உள்ளது. எனவே பணம் தர முடியாது என்று கைவிரித்து விட்டனர். இதனால் எங்கள் திட்டத்தில் மண் விழுந்துவிட்டது.
ஒரத்தி போலீசார் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இறந்தது நான்தான் என்ற நிலை நீடித்தது. இன்சூரன்ஸ் பணம் கிடைக்காவிட்டாலும், டில்லிபாபுவை கொன்ற கொலைப்பழி என் மீது விழவில்லை என்ற ஆறுதலோடு தலைமறைவாக வாழ்ந்தேன். எனது நண்பர்களும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை. போலீசாரும் என்னை தேடவில்லை. இந்த நிலையில்தான் டில்லிபாபுவின் தாயார் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் எங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டது.
ரூ.1 கோடி பணத்துக்காக நண்பர் டில்லிபாபுவை பழி கொடுத்துவிட்டோம். டில்லிபாபுவை 2 பேர் அழைத்து சென்றார்கள் என்று அவரது தாயார் லீலாவதி எங்கள் திட்டத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார். ஐகோர்ட்டு தலையிட்டதால் எண்ணூர் போலீசாரும் சுதாரித்துக்கொண்டு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டார்கள். 1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை அடைய வேண்டும் என்று நான் நாடகம் ஆடியது எனக்கு சிறை தண்டனையை கொடுத்து விட்டது.
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இதனையடுத்து 3 பேரும் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஐகோர்ட்டு தலையிட்டதின்பேரில் மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனின் அதிரடி நடவடிக்கையால் இந்த வழக்கில் 5 மாதங்களுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது.