Monday, December 23, 2024
Google search engine
Homeஇந்தியாபள்ளிக்கட்டணம் செலுத்த வற்புறுத்தியதால் 9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை - நெல்லையில் பரபரப்பு..!

பள்ளிக்கட்டணம் செலுத்த வற்புறுத்தியதால் 9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை – நெல்லையில் பரபரப்பு..!

பாளையங்கோட்டையில் பள்ளிக்கட்டணம் செலுத்த வற்புறுத்தியதால் 9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனியார் பள்ளியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜன், தனியார் ஊழியரான இவரின் மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களின் மகன்கள் நரேன் (வயது 14), சுர்ஜித் (வயது 10) அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். அந்த பள்ளியில் நரேன் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் நரேன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சுர்ஜித் மட்டும் பள்ளிக்கு சென்று இருந்தார். மாலையில் சுர்ஜித்தை அழைத்து வருவதற்காக மாரியம்மாள் பள்ளிக்கு சென்றார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. மாரியம்மாள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் நரேன் திறக்கவில்லை. உடனே அங்கு வந்த நாகராஜன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றார். அங்கு நரேன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த நரேனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நரேனின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் நேற்று காலையில் பாளையங்கோட்டையில் நரேன் பயின்ற தனியார் பள்ளிக்கூடத்தின் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-திருச்செந்தூர் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

உடனே போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டவர்கள், பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

மாணவன் நரேனின் பெற்றோர் கூறுகையில், “பொருளாதார சூழ்நிலை காரணமாக, நரேனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் செலுத்த வேண்டிய 2-வது தவணை கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதுகுறித்து நாங்கள் பள்ளி ஆசிரியர், முதல்வரிடம் பேசினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து கட்டணத்தை செலுத்துமாறு கூறினர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 2-ந்தேதி பள்ளிக்கு சென்ற நரேனிடம், கல்வி கட்டணத்தை செலுத்துமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த நரேன் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் சாவிற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம். பள்ளி ஆசிரியர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் ராஜ், தனியார் பள்ளி நிர்வாகத்திடமும், நரேனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் பள்ளிக்கூடம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments