கர்நாடகாவில் ஹனகல் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் 40-வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26-வயது பெண் ஒருவரும் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருந்தனர். 40வயது நபர் கர்நாடக அரசு பஸ் ஓட்டுநராக உள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 7-வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில்தான், இருவரும் கடந்த 8 ஆம் தேதி ஹனகலில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர்.
இருவரும் ஓட்டலுக்கு சென்றபோது வெளியே இருந்த ஆட்டோ டிரைவர் இதைக் கவனித்து தனக்கு தெரிந்த ஒரு கும்பலிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஓட்டலுக்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் இருந்த ஜோடி மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும் அந்தப் பெண்ணையும் உடன் இருந்த நபரையும் தங்கள் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆளில்லா இடத்திற்கு சென்ற கும்பல், அங்கு வைத்தும் தாக்கியது.
பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு உள்ளது. பின்னர் அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிடுமாறு அனுப்பி வைத்துள்ளது. ஓட்டல் அறைக்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலை வீடியோவாகவும் அந்த கும்பல் எடுத்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.