ரொறன்ரோவில் வீட்டு உரிமையாளர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரித் தொகை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 10.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோவ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளார்.
மேயராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டத்தில், இவ்வாறு வரி அதிகரிப்பு அறிவிக்கப்பட உள்ளது.
நீண்ட இடைவெளியின் பின்னர் கூடுதல் தொகையில் வரி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது.
ரொறன்ரோ நகர நிர்வாகம் பெருந்தொகை பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வரும் நிலையில் வரி அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
வீடற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாதைகளை அபிவிருத்தி செய்யவும், பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஒலிவியா சோவ் தெரிவித்துள்ளார்.
நகர நிர்வாகம் எதிர்நோக்கி வரும் நிதி நெருக்கடி நிலைமைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி ஒன்பது வீதமாகவும், நகர கட்டிட நிதியக் கட்டணம் ஒன்று தசம் ஐந்து வீதமாகவும் மொத்தமாக 10.5 வீதத்தினால் வரி அதிகரிக்கப்பட உள்ளது.
பல ஆண்டுகளின் பின்னர் சொத்து வரி இரட்டை இலக்க சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.