ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் வெண்கலப்பதக்கம் வென்றார். தென்கொரிய வீராங்கனைகளான யாங் ஜின் தங்கப்பதக்கமும், கிம் யெஜி வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் அரியானாவை சேர்ந்த ரிதம் சங்வான் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஒரு பிரிவில் ஒரே நாட்டை சேர்ந்த 2 பேர்தான் அதிகபட்சமாக பங்கேற்க முடியும். ஏற்கனவே நடந்த தகுதி சுற்று மூலம் தென்கொரியாவில் இருந்து 2 வீராங்கனைகள் தகுதி பெற்று விட்டதால் தற்போது முதல் 2 இடங்களை பிடித்த அந்த நாட்டு வீராங்கனைகள் தகுதி பெற முடியாது. இதனால் 3-வது இடம் பிடித்த ரிதம் சங்வானுக்கு ஒலிம்பிக் போட்டிக்கான அதிர்ஷ்டம் அடித்தது.
இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 16 பேர் தகுதிபெற்றுள்ளனர். இந்த வகையில் இது சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 15 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.