நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை,மயிலாப்பூரில், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகை கொண்டாடி வருவதால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
மேலும், சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி பெருங்குடியில் 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது. அத்துடன் எண்ணூர், அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.