Monday, December 23, 2024
Google search engine
Homeவிளையாட்டு15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடக்கம்

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடக்கம்

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன், போட்செப்ஸ்ட்ரூம், கிம்பெர்லி, ஈஸ்ட் லண்டன், பெனோனி ஆகிய நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி பிப்ரவரி 11-ந்தேதி வரை நடக்கிறது.

முதலில் இந்த போட்டி இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. இடைக்கால தடைவிதித்ததைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, ‘டி’ பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர்6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் இந்தியாவே இதுவரை வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 என்று 5 முறை மகுடம் சூடியுள்ளது. இதற்கு அடுத்து அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் பட்டம் வென்றுள்ளது. இந்த தடவை சாம்பியன் கோப்பையை வெல்வதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா இடையே கடும்போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. ஏனெனில் இதில் கலக்கும் வீரர்கள் குறுகிய காலத்திலேயே தேசிய அணிக்குள் கால்பதித்து விடுவார்கள். சனத் ஜெயசூர்யா (இலங்கை), பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட், இஷான்கிஷன், சுப்மன் கில் (இந்தியா), கிரேமி சுமித், மார்க்ரம் (தென்ஆப்பிரிக்கா), டிம் சவுதி, வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) இவர்கள் எல்லோருமே ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடி தான் பின்நாளில் பெரிய அளவில் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்தனர்.

இந்திய அணி பஞ்சாப்பை சேர்ந்த உதய் சாஹரன் தலைமையில் களம் இறங்குகிறது. சமீபத்தில் முத்தரப்பு கிரிக்கெட்டில் 112, 74, 50 ரன்கள் வீதம் விளாசிய சாஹரன் சூப்பர் பார்மில் உள்ளார். ஆதர்ஷ் சிங், ஆரவெல்லி அவினாஷ் ராவ், சச்சின் தாஸ், இன்னேஷ் மஹாஜன், பிரியன்ஷூ மொலியா, ருத்ரா பட்டேல், அர்ஷின் குல்கர்னி, முஷீர்கான், முருகன் அபிஷேக், தனுஷ் கவுடா, ராஜ் லிம்பானி, சாமி குமார் பாண்டே, ஆரத்யா சுக்லா, நமன் திவாரி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

முதல் நாளான இன்று புளோம்பாண்டீனில் நடக்கும் ஆட்டத்தில் அயர்லாந்து- அமெரிக்கா அணிகளும், போட்செப்ஸ்ட்ரூமில் நடக்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. இரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி தனது முதல் லீக்கில் நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் இந்த தொடரில் கிடையாது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments