தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மோடி வந்தார். வழிநெடுக திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்கும் விதமாக கைகளை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார்.
நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். கண்ணைக் கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். விமான நிலையம், பிரதமர் தங்கும் கவர்னர் மாளிகை, அவர் சாலை மார்க்கமாக செல்லும் பகுதிகள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதி போன்றவற்றில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.