இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மூலம் மெய்ப்பட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேக கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக நடந்தது. அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில், நாடு முழுவதும் பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பா.ஜனதா, இந்து முன்னணி மற்றும் ஆன்மிக அன்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கோவில்கள், திருமண மண்டபங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிப்பட வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தனர். பெரும்பாலான வீடுகளில் நேற்று மாலையில் அகல் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. தங்கள் வீடு முன்பு ராமர் படங்களை வைத்து பொது மக்கள் வழிபட்டனர்.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள பால ராமர் சிலையின் பிரான் பிரதிஷ்டை நாளை கொண்டாடும் விதமாக நேற்று மாலை சீதா தேவியின் சொந்த ஊரான ஜனக்பூரில் பக்தர்கள் 2.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர்.
முன்னதாக சீதா தேவியின் தந்தையான ஜனக மன்னன் ஆட்சி செய்த பண்டைய நகரம் சில வாரங்களுக்கு முன்பே பால ராமர் சிலை கும்பாபிஷேக கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டது. பால ராமர் வந்ததை கொண்டாடும் விதமாக வண்ணம் விளக்குகளாலும், வண்ண அலங்காரங்களாலும் நகரம் ஜொலித்தது.