இந்திய பங்குச்சந்தை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை இறங்குமுகமாக இருந்தது. அதன்பின்னர், நவம்பர் தொடக்கம் முதல் பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகம் கண்டது.
அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தல், சர்வதேச பங்குச்சந்தைகளின் சாதக நிலை, பொருளாதார நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இறுதி, ஜனவரி தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி, பேங்க் நிப்டி போன்றவை புதிய உச்சம் தொட்டன.
இதனை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை சரியத்தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்யத்தொடங்கியதும், இந்திய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததாலும் பங்குச்சந்தை வீழ்ச்சி பாதை நோக்கி சென்றது.
குறிப்பாக, கடந்த 17ம் தேதி பேங்க் நிப்டி 2 ஆயிரம் புள்ளிகள் சரிந்தன. 16ம் தேதி 48 ஆயிரம் புள்ளிகள் இருந்த பேங்க் நிப்டி ஒரேநாளில் 2 ஆயிரம் புள்ளிகள் சரிந்து 46 ஆயிரம் புள்ளிகள் சென்றது. 73 ஆயிரம் புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் 71 ஆயிரத்து 500 புள்ளிகளாக சரிந்தது.
அதன்பின்னரும், இந்திய பங்குச்சந்தை கரடிகளின் ஆதிக்கத்தால் (கரடி – சரிவு, காளை – உயர்வு) தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்றும் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் சரிந்து 70 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகமானது. பேங்க் நிப்டியும் சுமார் 1000 புள்ளிகள் சரிந்து 45 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்றும் சரிவுடன் தொடங்கியது. அதன்படி, பேங்க் நிப்டி இன்று காலை 500 புள்ளிகள் சரிந்து 44,450 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 70 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது.
ஆனால், வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவில் இருந்து இந்திய பங்குச்சந்தை மீண்டு வருகிறது. அதன்படி, சரிவில் இருந்து மீண்ட பேங்க் நிப்டி 45 ஆயிரத்து 300 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 70 ஆயிரத்து 700 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.