சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹன்சென்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பிரனாய் கால்இறுதியில் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை எதிர்கொள்கிறார்.
இதேபோல் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-15, 21-16 என்ற நேர்செட்டில் ஜப்பானின் அகிரா கோகே-தாய்சி சாய்டோ ஜோடியை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.
கால்இறுதியில் சாத்விக்-சிராக் கூட்டணி, இந்தோனேஷியாவின் லியோ ரோலி-டேனியல் மார்டின் இணையை சந்திக்கிறது.