தென் ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டி தொடரின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரீட்ஸ்கே 48 ரன்கள் அடித்தார். எம்ஐ அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே மற்றும் தாமஸ் கபேர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் டர்பன் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம் கரண் 38 ரன்கள் அடித்தார். டர்பன் அணி தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்த தொடரில் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.