2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பாரத ரத்னா மிக உயரிய சிவிலியன் விருதாகும், அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன்.
பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
இதில் விளையாட்டு துறையில் 7 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 43 வயதில் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ள ரோகன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, மல்லர்கம்ப பயிற்சியாளர் உதய் விஷ்வநாத் தேஷ்பாண்டே, வில்வித்தை பயிற்சியாளர் பூர்ணிமா மஹட்டோ, கவுரவ் கண்ணா (பாரா பேட்மிண்டன் பயிற்சியாளர்), சதேந்திர சிங் லோஹியா (நீச்சல்), ஹர்பிந்தர் சிங் (ஆக்கி பயிற்சியாளர்) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.