பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார். ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவரான நிதிஷ்குமார் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.
பின்னர், பாஜக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி 2 ஆண்டுகளுக்கு முன்பு லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் நிதிஷ் குமார் கைகோர்த்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய லாலுபிரசாத் உடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றி வந்தார்.
ஆனால், சமீபகாலமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அவரை நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள நிர்வாகிகள் வெளிப்படையாக வலியுறுத்தினர். ஆனால் அதை கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.
மேலும், பீகாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி வலுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பீகார் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த நிதிஷ்குமார் விரும்புகிறார். ஆனால், லாலு கட்சி அதை ஏற்கவில்லை.
ஆட்சி நிர்வாகத்திலும், அரசியலிலும் நிதிஷ்குமாரின் முக்கியத்துவத்தை குறைக்க லாலு கட்சி காய் நகர்த்தி வருவதாக ஐக்கிய ஜனதாதளம் கருதுகிறது.
அதே சமயத்தில், சமீபகாலமாக பாஜகவுடன் நிதிஷ்குமார் நெருக்கம் காட்டி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது அறிவித்ததற்காக, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை கலைக்கப்படாமல் வரும் ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்-மந்திரியாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடியும் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
அதேபோல், பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது. தனித்து போட்டியிட்டாலும் இந்தியா கூட்டணியில் தொடர்வதாக அம்மாநில முதல்-மந்திரி பகவத்மான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.