பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு மந்திரிகள் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சீனாவுடன் அதீத நெருக்கத்தை மாலத்தீவின் புதிய அதிபர் காட்டி வருகிறார். எனினும், எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன.
இந்த விவகாரத்தால் மாலத்தீவில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு நடுவே இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துகளை மாலத்தீவு முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முன்னாள் அதிபர் முகமது சோலி கூறியிருப்பது மாலத்தீவு அரசியலில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.