புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் தொடக்க நிலைகளின்போது காணப்பட்ட அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டு உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து, தேசிய சுகாதார ஆணையத்தின் சுகாதார அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அதில், அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளை பற்றி எடுத்துரைத்தனர்.
இதில், லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நிமோனியா வகை தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனால் தீவிர சுவாச கோளாறுகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படும் என்றும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது. இதுகுறித்த விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது. ஆனால் இதுகுறித்து சீன அரசாங்கம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் மற்றும் பீஜிங் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றை தொடர்பு கொண்டது. அப்போது பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் அசாதாரணமான அல்லது புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் ஏற்கனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்களின் பொதுவான அதிகரிப்பு மட்டுமே என்றும் சீன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுவாச நோய்க்கிருமிகளுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள், நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல், முக கவசம் அணிதல், உடல்நலம் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனிநபர்கள், பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.