சமீப காலங்களாக, ஆன்லைன் வழியே வேலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதில் சில இடங்களில் முறைகேடுகளும் நடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அனில் குமார் மீனா (வயது 30) என்பவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, கவர்ச்சிகர பகுதிநேர வேலை வாய்ப்புக்கான உத்தரவாதங்களை வழங்கியுள்ளார்.
இதற்காக கூகுள், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக தளங்களையும் பயன்படுத்தி இருக்கிறார். இதேபோன்று, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, வசதி படைத்த தனிநபர்களை ஈர்த்துள்ளார். அவர்களிடம், பெரிய அளவில் பணம் கிடைக்கும் என கூறி பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவித்து இருக்கிறார்.
இதன்படி, நம்பிக்கையை பெறுவதற்காக அவர்களுக்கு தொடக்கத்தில் லாபம் அளித்திருக்கிறார். நண்பர்களுடன் கூட்டாக திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார். அதன்பின் பெரிய அளவில் அவர்கள் முதலீடு செய்ததும், அந்த தொகையை தங்களுடைய கணக்குக்கு மாற்றி விட்டு தொலைபேசியை துண்டித்து விடுவார்கள்.
இதற்காக போலியான நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ள அவர், தொடக்கத்தில் ரூ.200 போனசாக கொடுத்து, அதன் வழியே பலரையும் ஈர்த்திருக்கிறார். யு.பி.ஐ. மற்றும் பிற ஆன்லைன் வசதிகள் வழியே மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு பணபரிமாற்றங்களை செய்துள்ளார்.
இதுபோன்று நூற்றுக்கணக்கானோரிடம் மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுபற்றி மும்பை மற்றும் ஜெய்ப்பூர் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளி என அனிலை கண்டறிந்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தொடர்ந்து இருப்பிடங்களை மாற்றி கொண்டே வந்துள்ளார். எனினும், அவரை புலனாய்வு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதுவரை ரூ.1.42 கோடி அளவுக்கு அவர் மோசடி செய்து பணம் ஈட்டியுள்ளார். இதில், அவருடைய நண்பர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. அனிலிடம் இருந்து 1,200 சிம் கார்டுகள் மற்றும் எண்ணற்ற செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இதனால், ஆன்லைன் வழியான பகுதிநேர வேலை வாய்ப்புகள் வரும்போது, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்களை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதிக அளவில் பணம் வரும் என உண்மையல்லாத வாக்குறுதிகளை அளிக்கும் திட்டங்களில் இருந்து விலகி இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது. பணபரிமாற்றங்களில் ஈடுபடும் முன் நிறுவனத்தின் நம்பக தன்மை மற்றும் ஆன்லைன் விமர்சனங்களை பற்றி ஆராய்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.