திருச்சி கருமண்டபம் ராம்நகரை சேர்ந்தவர் ஐன்ஸ்விங் பாலா (வயது 55). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கணித பாடம் எடுக்கும் 10-ம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் கணக்கு பாடத்தில் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை.
இதனால் அந்த மாணவரை கணக்கு கற்றுக்கொள்ள தனது வீட்டுக்கு டியூசன் படிக்க வருமாறு ஐன்ஸ்விங் பாலா அழைத்துள்ளார். அதன்பேரில் அந்த மாணவர் கணித ஆசிரியர் வீட்டுக்கு டியூசனுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று டியூசன் படிக்க வந்த மாணவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழுவினர், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கணித ஆசிரியர் ஐன்ஸ்விங் பாலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.