2019ல் அனுராக் பதக் என்பவர், மனோஜ் குமார் ஷர்மா எனும் இந்திய காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தின் திரை வடிவம்தான் 12th ஃபெயில்.
இத்திரைப்படத்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கியிருந்தார்.
விது வினோத் சோப்ராவின் மனைவி அனுபமா ஒரு முன்னணி திரைப்பட விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிமல், சலார், டங்கி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்ட 12th ஃபெயில் திரைப்படம், ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த வெற்றி குறித்து விது வினோத் சோப்ரா தெரிவித்ததாவது:
இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயன்ற போது, ஓடிடி-யில் (OTT) மட்டுமே வெளியிடுமாறு அனைவரும் என்னை எச்சரித்தனர்.
என் மனைவி என்னை அச்சுறுத்தினார். இப்படத்தை யார் பார்ப்பார்கள் என என் மனைவியே கூறினார்.
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்ததால் எங்கள் சொந்த பணத்திலேயே விளம்பரங்கள் செய்தேன். தொடக்கத்தில் இப்படத்திற்கு சிறிய வரவேற்புதான் கிடைத்தது. ஆனால், தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் பாருங்கள்.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.
அனுபமா குறித்து சோப்ரா வெளியிட்ட கருத்திற்கு பிரபல இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
நடிகை கங்கனா கூறியிருப்பதாவது:
திரைப்பட பத்திரிக்கையாளர் துறையையே அனுபமா அவமானப்படுத்துபவராக உள்ளார்.
புத்திசாலியான பெண்கள் மற்றும் இளவயது பெண்களை கண்டால் பொறாமைப்படுபவராகவும் உள்ளார்.
தனது கணவரை கண்டே அவர் பொறாமைப்படுகிறார். கணவரின் வளமையையும் புகழையும் கொண்டுதான் அனுபமா தற்போது அனுபவிக்கும் அனைத்தையும் அடைந்துள்ளார்.
பாலிவுட் இயக்குனரின் மனைவி எனும் அடையாளத்தை திரைப்பட துறையில் பிரபலமானவர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயன்படுத்துகிறார்.
உண்மையான திறமைசாலிகளையும், சிறந்த திரைப்படங்களையும் வெறுத்து ஒதுக்கும் வதந்தி கும்பலுடன் இணைந்து செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.