கணினி உபபொருட்களான சிப்புகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய கூடிய உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங்கின் தலைவராக லீ ஜே-யாங் (வயது 56) செயல்பட்டு வருகிறார்.
இவருடைய தந்தை லீ குன்-ஹீ மாரடைப்பால் மரணம் அடைந்த பின்னர், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சாம்சங் நிறுவனங்களை தலைமையேற்று நடத்தி வருகிறார். 2022-ம் ஆண்டு அக்டோபரில் முறைப்படி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு சாம்சங் சி அண்டு டி மற்றும் செயில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களை இணைத்ததில் அந்நாட்டு அரசுக்கு, லஞ்சம் கொடுத்து ஊழல் செய்ததில் தென்கொரிய அரசு கவிழ்ந்தது கவனிக்கத்தக்கது.
அவர் பங்கு விலைகளை அதிகரித்து காட்டியும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்தும் உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும்படி கோர்ட்டில் வழக்கறிஞர்கள் கோரினர். ஆனால், அது வழக்கம்போல் நடைபெற கூடிய வர்த்தக நடவடிக்கை என்றும், அதில் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.
2015-ம் ஆண்டு ஒப்பந்த வழக்கில், அப்போது அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹை என்பவருக்கு, லீ ரூ.53.16 கோடி லஞ்ச பணம் கொடுத்திருக்கிறார். இதனால், அரசின் ஆதரவை பெற்று நிறுவனங்களை இணைத்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 18 மாதங்கள் வரை அவர், சிறையில் இருந்துள்ளார்.
இதன்பின், 2021-ம் ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட லீக்கு, 2022-ம் ஆண்டு ஆகஸ்டில், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு வழங்கினார்.
இந்த நிறுவன இணைப்புக்கு, பங்குகளை வாங்கிய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் கொந்தளிப்பும் ஏற்பட்டது. சாம்சங் சி அண்டு டி நிறுவனத்தில் இருந்த தேசிய ஓய்வூதிய நிதியின் பங்குகள், கோடிக்கணக்கான மதிப்பில் சரிவை சந்தித்தன.
இதற்கு அப்போது அதிபராக இருந்த பார்க் நெருக்கடி கொடுத்துள்ளார். இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பல மாதங்கள் நீடித்தது. பார்க் மற்றும் அவருடைய உதவியாளரும் ஊழலில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பதவியில் இருந்து பார்க் தூக்கியெறியப்பட்டார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கில் இருந்து லீ இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான லாபத்தில் 34% வருடாந்திர சரிவை சந்தித்தது என்று அந்நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது.