நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசியதாவது:- பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இன்று வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கற்பித்தல் மற்றும் கற்றல், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. அந்த 16 மருத்துவமனைகளில் 6 மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுகின்றன. 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தவிர, ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூர் (ஜம்மு), மதுரை (தமிழ்நாடு), அவந்திபோரா (காஷ்மீர்), ரேவாரி (அரியானா) மற்றும் தர்பங்கா (பீகார்) ஆகிய இடங்களில் உள்ள ஆறு எய்ம்ஸ்கள், செயல்பாட்டுக்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. 2022-23-ம் ஆண்டில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.