தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகள், முறைகேடு வழக்குகளை விசாரித்த கீழ் கோர்ட்டுகள், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்குகளை நேற்று முதல் தினமும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்ன உத்தரவு என்பதை படித்து பார்க்கவேண்டும். அதனால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நாளை (அதாவது இன்று) தள்ளிவைத்தார். அதன்படி வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.