தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்கவைத்த வீரர்களையும், விடுவித்த வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்கவைத்து கொண்டன. 62 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்கவைத்து, 8 வீரர்களை விடுவித்தது.
நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் ஒரு வீரரை மட்டும் விடுவித்து 17 வீரர்களை தக்கவைத்தது. விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் இந்த போட்டியில் விளையாட தகுதி படைத்த வீரர்கள் போட்டிக்கான இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ஏலப்பட்டியலில் நட்சத்திர வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், வேகப்பந்து வீச்சாளர்கள் டி.நடராஜன், சந்தீப் வாரியர் உள்பட 675 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து அதிகபட்சமாக 62 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஆண்டு சாய் சுதர்சன் அதிகபட்சமாக ரூ.21.60 லட்சத்துக்கு ஏலம் போனார். அதுபோல் இந்த தடவையும் வீரர்களை எடுக்க அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்பதால் வீரர்களுக்கு அதிர்ஷ்ட மழை அடிக்க வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு அணிகளும் 16 முதல் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக எல்லா அணிகளும் ரூ.70 லட்சம் வரை செலவிடலாம். தக்கவைக்கபட்ட வீரர்களுக்கான தொகை கழித்து மீதமுள்ள தொகையை கொண்டு வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் கையிருப்பு உள்ளது. குறைந்த தொகையாக கோவை கிங்ஸ் அணியிடம் ரூ.6.85 லட்சம் இருக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 வீரர்களை நிரப்ப ரூ.41.30 லட்சத்தை கைவசம் வைத்துள்ளது. கடந்த முறை பால்சி திருச்சி என்ற பெயரில் ஆடிய திருச்சி அணி இந்த முறை திருச்சி கிராண்ட் சோழாஸ் என்ற புதிய பெயருடன் களம் இறங்குகிறது.