பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). தொழில் அதிபரும், சினிமா இயக்குனருமான இவர், தந்தையுடன் இணைந்து மனிதநேயம் பயிற்சி மையத்தையும் கவனித்து வருகிறார்.
வெற்றி தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபிநாத் (35) என்பவருடன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
சுற்றுலா சென்ற அவர்கள், சென்னை திரும்புவதற்காக கடந்த 4-ந்தேதி மாலை அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். காரை தஞ்ஜின் என்பவர் ஓட்டியுள்ளார்.
கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது பாறை ஒன்று உருண்டு வந்து மோதியது. இதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளதாக்கு பகுதியில் விழுந்ததோடு, அருகில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்படி, போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கார் டிரைவர் தஞ்ஜின் காருக்குள் ‘சீட் பெல்ட்’ அணிந்தபடி இறந்து கிடந்தார். படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கோபிநாத் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் காரில் பயணித்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. இதைத்தொடர்ந்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, உள்ளூர் மக்களும் இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே நேற்று 4-வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்தது. இந்த பணியில் வெற்றி பயன்படுத்திய செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், சட்லஜ் நதி ஓடும் பகுதிகளிலும், நதியை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் பாறை இடுக்குகளிலும் தேடுதல் பணி நேற்று துரிதப்படுத்தப்பட்டது. நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், டிரோன் உதவியுடனும் தேடுதல் பணி நடக்கிறது.
விபத்து நடந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடுதல் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) தேடுதல் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று மாலை விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்துவிட்ட நிலையில், அணை பகுதியில் ஆழமாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.