இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
போரில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மேலும், தங்கள் வசம் உள்ள பிணைக்கைதிகளில் முதற்கட்டமாக 50 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கு மாறாக தங்கள் நாட்டின் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் 150 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேல் சிறையில் இருந்து இதுவரை 39 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மாறாக பிணைக்கைதிகளில் 13 இஸ்ரேலியர்கள், தாய்லாந்து நாட்டினர் 4 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிடியில் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேலியர்களில் 9 வயதான ஒஹட் முன்டிர் என்ற சிறுவனும் விடுதலை செய்யப்பட்டுள்ளான். விடுதலையான சிறுவன் தனது குடும்பத்தினரை சந்தித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தந்தையை கண்ட சிறுவன் துள்ளி குதித்தவாறு சென்று கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.