மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று மக்களவையில் துணை கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி உள்ளோம். நெடுஞ்சாலை ஆணையம் கட்டுமான பணிகளில் எதிர்கொள்ளும் சவால்களை தெரிவித்துள்ளோம். நான் இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் சாலையை அமைக்க போதுமான எல்லாவற்றையும் பெறாமல் எப்படி பணிகளை முடிக்க முடியும். இதுதொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் விவாதித்து, சுமுகமான தீர்வுகளை வேகமாக எட்ட நான் தயாராக உள்ளேன்” என்றார்.
கேரள எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கட்காரி, “கேரளாவின் கொல்லம் தமிழகத்தின் மதுரையை இணைக்கும் என்.எச்.774 பசுமை வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் செலவில் 50 சதவீதத்திற்கு பதிலாக 25 சதவீத செலவை மத்திய அரசு ஏற்கும் திட்டத்தை கேரள அரசு ஏற்றக்கொண்டுவிட்டது. மேலும் மாநில ஜி.எஸ்.டி. 9 சதவீதத்தை கைவிடவும் தயாராக இருந்தது. அவர் (கேரள முதல் மந்திரி) ஏற்றுக்கொண்டார். ஆனாலும் நாங்கள் அவர்களின் முறையான பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய கட்காரி, “தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், அனுமதிகள் கிடைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உதவ வேண்டும். அப்போதுதான் பணிகள் துரிதமாக முடிவடையும்.
இந்த சபைக்கு நான் நம்பிக்கை தெரிவிக்கிறேன்… வரும் டிசம்பர் மாதத்திற்குள் சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை பணிகளை முடிக்க முயற்சிக்கிறோம். இந்த பணிகள் முடிந்தால் சென்னை-பெங்களூரு இடைப்பட்ட தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்க முடியும்.” என்றார்.