உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வி, இந்திய ரசிகர்கள்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. போட்டி முடிந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே சில இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்தினர்.
இதையடுத்து சோர்வுடன் தங்களின் ஒய்வு அறையில் இருந்த இந்திய அணியினரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தினார். மேலும், இந்திய அணியினரை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, இந்திய அணியின் ஓய்வு அறைக்கு சென்றது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான விரேந்திர சேவாக் கூறியதாவது;
வீரர்களை ஓய்வு அறையில் நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம். ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய அவர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர இது அவசியம். தனது முக்கிய பணிகளுக்கு இடையே ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் அற்புதமான நடத்தை இது.
தோல்விக்கு பிறகு அணியினர், குடும்ப உறுப்பினர்களை போன்று ஒற்றுமையுடன் ஆறுதல் கூற எவரேனும் உள்ளனரா என ஏங்கும் தருணம் அது. இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும். இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.